காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ ஹப் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கிராமசேவையாளர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 9 மணியளவில் தெல்லிப்பளை சந்தியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நுணாவில் ஜே-309 கிராமசேவையாளராக கடமையாற்றும் ஐயாத்தம்பி கானமூர்த்தி (வயது 40) என்பவரே காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
பன்னாலை பகுதியில் இருந்து வந்த மேற்படி கிராமசேவையாளர் பிரதான வீதிக்கு நுழைந்தபோது எதிரே வந்த இராணுவ ஹப் மோதியதில் இவர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வாகன சாரதியான 5 ஆவது பொறியியல் பிரிவினை சேர்ந்த கோப்ரல் தர சாரதி தெல்லிப்பளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.