இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை: பசில்

pasil-rajapakshaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்’ என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘அது மாத்திரமன்றி தமிழ் இளைஞர், யுவதிகளை அரச படையிலும் இணைத்துள்ளோம். இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை. அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘வடமாகாண மக்களுக்கு அதிகாரத்தினை கொடுக்க அரசிடம் கேட்பவர்கள் இந்த நாட்டில் நிலவும் சமாதானத்தினை பெற்றுகொடுக்க ஏன் முனையவில்லை?

அரசாங்கம் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை பறிக்கின்றது என சிலர் கூறுகின்றனர்.

வடமாகாணத்தில் இந்திய சமாதானப்படை இருந்த போது எடுத்த காணிகளைதான் எமது அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக
மீண்டும் கையளிக்கின்றார்களே தவிர, அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களில் ஒரு அங்குலத்தினை கூட எடுக்கவில்லை.

உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணியில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்பிற்கான காணிகளை தவிர ஏனைய காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

தாங்கள் ஆட்சி அமைத்தால், பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொடுப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறி வருகின்றார்கள். ஆனால், ஏற்கனவே ஜனாதிபதி தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார் என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

அது மாத்திரமல்ல தமிழ் இளைஞர், யுவதிகளை அரச படையில் இணைத்துள்ளோம். இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை. அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண மக்கள் நன்றியுடையவர்கள். அந்த வகையில், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சரியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது’ என்றார்.

தொடர்படைய செய்தி

நல்லூரில் பசில் …