இந்தியாவிலிருந்து கடலுக்கடியால் இலங்கைக்கு மின்சாரம்!

சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின் எரிசக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா தனது உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு இந்தியாவிடம் 500மெகா வாட் மின்சாரத்தைக் கோரியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது, துணை-கடல் சக்தி இணைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் எரிசக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி, நாம் பங்களாதேஸ், நேபாளம், பூட்டான், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு மின்சாரத்தினை ஏற்றுமதி செய்கின்றோம்.

கடலுக்கடியிலான மின் இணைப்புக் கட்டமைப்பு மூலம் சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வது தொடர்பாக தற்போது ஆலோசித்து வருகின்றோம்.

இன்னமும் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், நாம் துணை – கடல் இணைப்பு தொடர்பான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.

சிறிலங்காவுக்கு மின்சார விநியோகம் செய்வது குறித்து முன்னர் இந்தியா ஆலோசனை நடத்தியது, ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் திட்டம் சாத்தியமானதாக இருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.

அப்போது நல்ல தொழில்நுட்பம் இருக்கவில்லை. அது செலவுமிக்கதாகவும் இருந்தது.

இப்போது தொழில்நுட்பம் பெருமளவில் உயர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தியை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

எனவே சிறிலங்காவுக்காக இதனை நாம் மீளப் பரிசீலிக்கிறோம். கடலுக்கடியில் மின் இணைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்று ஆராய்கிறோம்.

“இது நல்ல தொழில்நுட்பம் மாத்திரமன்றி செலவும் குறைவானது.” என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor