அஹிம்சை வழித் தீர்வே சாத்தியம் வன்முறை வழியல்லவாம்!

“ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து எமது மக்களை இன்னமும் மாயைக்குள் வைத்திருக்கவே சிலர் விரும்புகின்றனர்” – இப்படித் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.

sumantheran

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 8 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறிய விடயங்கள் வருமாறு:

இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை தவறென வெளிப்படையாகவே ரவிராஜ் தெரிவித்து வந்தார். அத்தோடு இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகவே சிங்கள மக்கள் மத்தியில் மிகத் துணவோடு எடுத்துச் சொல்லியும் வந்தார். இதனாலேயே அவர் படுகொலையும் செய்யப்படடார்.

குறித்த கொலைக் குற்றவாளி இன்னொரு தமிழ்க் கட்சியொன்றின் உறுப்பினரே. இக்கொலை நடைபெற்று எட்டு வருடமாகியும் கொலைக் குற்றவாளி பிடிபடாத விசித்திரமான நிலை இங்குதான் இருக்கிறது.

ரவிராஜ் கொலையாளி கண்டு பிடிக்கப்பட்டார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது அக்கொலையாளி வெளிநாட்டிற்கு சென்றிருக்கின்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் நீதி, நீயாயமான கோரிக்கைகளையும் உண்மைகளையும் ரவிராஜ் சிங்கள மக்கள் மத்தியில் தெரிவித்தமையை சிங்கள அரசியல் தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனெனில் சிங்கள மக்களை சந்தோசப்படுத்துவம் வகையிலையே தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களையே சிங்களத் தலைவர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வந்தனர். இதேபோன்று தான் தமிழ் மக்களை சந்தோசப்படுத்தும் வகையில் தமிழ்த் தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கின்றனர். இதனாலேயே தான் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் முழுமையாக உண்மை இல்லை. அதேநேரம் முழுமையாக உண்மை இல்லை என்றும் நான் கூறமாட்டேன். தமிழ் மக்களுடைய அதே நீதி, நியாயமான கோரிக்கைகளையும் உண்மைகளையும் சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிங்கள மக்களிடத்தே நாம் அதனை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக இலங்கையில் வாழ்கின்ற சிங்கள மக்களை எமது நியாயத்தின்பால் ஈர்ப்பது குறைவாகவே இருந்தது. அதனைத் தான் ரவிராஜ் செய்தார். அந்த இடைவெளி இப்போதும் இருக்கின்றது. உண்மைகளை விளக்கி எமது நீதி நியாமான கோரிக்கைகளை ஏனைய சமூகு மக்களும் ஏற்றுக் கொள்ளும்போது மாற்றமென்பது இலகுவாகவே வரும். இவ்வாறு அதனை எடுத்துச் செல்லும் மென்தீவிரம் எம்மிடம் வேண்டும். அதனூடான வருகிற மாற்றம் உண்மையான நிலையான நிலைத்து நிற்றக்க கூடியதான தீர்வாகவே அமையும்.

இரவோடிரவாக கொண்டு வரப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத 13 ஆவது திருத்தம் சட்டம் போன்று இது இருக்காது. இதனை ரவிராஜ் போன்றவர்கள் முன்னெடுக்கும்போது அவருக்கு வெளியே இருந்துதான் எதிர்ப்புக்கள் தடைகள் வந்தன. ஆனால் இதனை நாம் முன்னெடுக்கும் போது எமக்குள்ளேயெ இருக்கின்ற சக்திகள் இதற்கு தடையாக வரும். ஆகவே இதனை மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனூடாக மென் தீவீர வலுவை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளும் போது உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நாட்டில் தமிழ், சிங்கள இரண்டு தரப்பினர்களும் உண்மைகளைச் சொல்ல தயங்குகின்றனர். இதனாலே தான் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

ஆகவே இரு தரப்பினர்களும் உண்மைகளை மக்களிடத்தே சொல்ல வேண்டும். இதற்கு வன்வலு (வன்முறை) சாத்தியமில்லை. மென்வலு (அகிம்சை) ரீதியாகவே எடுத்துச் சொல்ல முடியும். வன்முறைக்கு இங்கே இடமில்லை. ஆனால் இதனைச் சொல்ல நாம் தயாரில்லை. இது தான் யதார்த்தம். இன்று எம்மிடம் ஆயுதமும் பண பலமும் இல்லை. இல்லாததை இருக்கிறதென்பது முட்டாள்தனம். எமது மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டபோது எழுந்து நிற்பதற்காகவெ ஆயுதம் ஏந்தப்பட்டது.

உலக சரித்திர நீரோட்டத்தின்படி அன்றைய நிலையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய போராட்டம் நடத்தப்பட்டது உண்மை. இந்தப் போராட்டத்தில் பல ஆயிரம் பேர் தமது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றனர். அதனைச் சரித்திரத்தில் யாரும் கொச்சைப்படுத்த முடியாது. போற்றப்பட வேண்டும். ஆனால் இன்றும் அதே போராட்ட நிலைமைகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனைவே விரும்புகின்றனர். அவ்வாறு கூறி மக்களை ஏமாற்றி மாயையை வைத்திருப்பதயையே விரும்புகின்றனர்.

இவ்வாறு தனது உரையில் அவர் மேலும் தெரிவித்தார்.