அரசியல் கைதிகளைக் குற்றவாளிகளாக்கவே திட்டமிட்டு அவர்களது வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இவர்களது வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றி விசாரணைகள் தொடரப்பட வேண்டும்.
இல்லையெனில் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வடக்கிற்கு வரமுடியாத அளவில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்குச் சாமரம் வீசாமல் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு கைதிகளை விடுவிப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
இல்லையெனில் அவர்களுக்கெதிராகவும் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். விரைவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்தவேண்டும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.