அன்பேசிவம் அமைப்பு குடிநீர் விநியோகத்துக்கென மூன்று இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் அன்பே சிவம் அமைப்பு வடக்கின் குடிநீர் விநியோகத்துக்கென இன்று சனிக்கிழமை (16.08.2014) மூன்று இலட்சம் ரூபாவைக் கையளித்துள்ளது.

1

வடக்கு மாகாணம் கடும் வரட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் குடிநீருக்குப் பாரிய பற்றாக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் நிதி உதவியுடன் உள்ளூராட்சி மன்றங்கள் நீர் வழங்கும் சேவையை மேற்கொண்டாலும் நிதி பற்றாக்குறைவாலும் போதிய வாகனங்கள் இல்லாமையாலும் நீர் வழங்கலை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை.

இதனால், வடக்கு மாகாண விவசாய அமைச்சு கடும் நீர் நெருக்கடி நிலவும் பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் அனுசரணையுடன் குடிநீரை விநியோகித்து வருகிறது.

நீர் வழங்கும் சேவையை விரிவுபடுத்துவதில் பொருளாதாரரீதியாக இருக்கும் நெருக்கடியை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அண்மையில் சுட்டிக்காட்டியதனை அடுத்தே சூரிச்சிவன் கோவிலின் சைவத்தழிழ்ச் சங்கத்தின் உபபிரிவான அன்பே சிவம் அவசர உதவியாக மூன்று இலட்சம் ரூபாவை அவரிடம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அன்பே சிவத்தின் யாழ்மாவட்டக் கிளையின் தலைவர் அ.அருளானந்தசோதி இத்தொகையைக் கையளித்துள்ளார்.

அன்பே சிவம் அமைப்பு வடக்கு கிழக்கில் பல்வேறு வகையான சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor