ஞானசாரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் – சி.வி.கே

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.

நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி கொலம்பே மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு தமிழ் தரப்பினர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

“அந்த சந்தர்ப்பத்தில் பௌத்த தேரர்கள் நடந்து கொண்ட அடாவடித்தனச் செயற்பாட்டையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மரணித்த மேதாலங்கார தேரர் நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியில் அடாத்தாக விகாரை ஒன்றை அமைத்து அமைதிக்குப் பங்கமாகச் செயற்பட்டவர்.

இந்த இடத்தில் விகாரை இருந்தது என்ற கூற்றை இனவாத தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரே மறுதலித்துள்ளார். மரணித்த ஒருவரின் உடலை அமைதியாகத் தகனம் செய்வதே மானிட தர்மம்.

ஆனால் அங்கு வந்த பௌத்த தேரர்களோ அதனை வைத்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வன்முறை மூலமாக நிலைநிறுத்த முயன்றுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரரும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகிருந்தபொழுதே நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்படியிருந்தும் அவர் உடல் தகனத்தில் முன்னின்று கலந்து கொண்டுள்ளார். இந்தமுறையும் அவர் நீதிமன்றத்தை அவமதித்தே உள்ளார். சட்ட நியாயப்படி இவருக்கெதிராக மீண்டுமொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படுவதே முறையான சட்ட ஒழுங்கு பராமரிப்பு செயற்பாடாகும்.

ஆனால் இந்த நாட்டு நீதித்துறை இவ்வாறு செயற்படாது என்ற துணிச்சலிலே அவரும் அவருடன் சேர்ந்து இயங்கும் தேரர்களும் சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.

நீராவியடியில் அரங்கேற்றப்பட்ட அடாவடித்தனம் அப்பட்டமான சட்டமீறல் என்பதால் இது சம்பந்தமான காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி நிற்கின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts