பலாலி விமான நிலைய தொழில்வாய்ப்பில் வடக்கிற்கு முக்கியத்துவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உறுதி

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அத்துடன், பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளூர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளை அமைச்சர் நேற்றையதினம் பார்வையிட்டார். இதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பான மதிப்பீட்டுக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதி அளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும். விமான சேவை உத்தியோகபூர்வமாக 16ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

4 விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும். கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்கள் அவையாகும்.

இந்த விமான நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்ட வலயமாக சர்வதேச விமான சேவைகள் அரம்பிக்கப்படும் – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்புனர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்தி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

Related Posts