நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – மக்கள் அவதானம்

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அதிதிணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மற்றும் வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Posts