சட்ட மருத்துவ நிபுணர் மயூரதனுக்கு எதிராக இணையத்தளத்தில் அவதூறு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதனுக்கு எதிராக இணையத்தளம் ஊடாக அவதூறு பரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இணையக் குற்றங்களை விசாரிக்கும் இலங்கை அவசர கணினி தயார்நிலைப் பிரிவிடம் விசாரணை அறிக்கையை குறுகிய காலப்பகுதிக்குள் கோருமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார்.

தனது சட்ட மருத்துவ சேவை தொடர்பில் தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் தொடச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று பற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் உருத்திரபூபதி மயூரதன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடந்த டிசெம்பர் மாதம் முறைப்பாடு வழங்கினார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிஸார் காலதாமதப்படுத்துவதாக சட்ட மருத்துவ நிபுணரால் குற்றஞ்சாட்டப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளரான சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன் மன்றில் முன்னிலையானார்.

முறைப்பாட்டாளரின் சார்பில் மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் முற்பட்டார்.

“முறைப்பாட்டாளர் சட்ட மருத்துவ நிபுணராவார். அவரின் நிபுணத்துவ விசாரணையின் மூலம் மாணவி வித்தியா படுகொலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை, விரிவுரையாளர் போதநாயகி உயிரிழப்பு, சுழிபுரம் பாடசாலை மாணவி கொலை வழக்கு எனப் பல வழக்குகளில் முக்கிய சாட்சிகள் கிடைக்கப்பெற்றன.

அவ்வாறான சட்ட மருத்துவ நிபுணருக்கு அவதூறு பரப்பும் வகையில் அவர் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு இணையத்தளத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

அதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட போதும் பொலிஸார் விரைவான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.

எனவே முறைப்பாட்டாளருக்கு எதிராக அவதூறு பரப்பியவர் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுதொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த மன்று கட்டளையிடவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் சமர்ப்பணம் செய்தார்.

அதனை ஆராய்ந்த மன்று, அவதூறு பரப்பிய இணையத்தளம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதனை இயக்குபவர் தொடர்பில் தகவல்களுடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இணையக் குற்றங்களை விசாரிக்கும் இலங்கை அவசர கணினி தயார்நிலைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இந்த விசாரணைகளை துரிதமாக குறுகிய காலத்துக்குள் நிறைவுறுத்த பொலிஸாருக்கு கட்டளையிட்ட மன்று, வழக்கை வரும் 25ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

Related Posts