கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், வெள்ள அனர்த்த சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 10 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்த கலந்துரையாடலின் போது, கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த காலங்களில் வடக்கில் பெய்துவந்த அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள காலங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ள நீர் வடிந்தோடியதன் பின்னர் வீடுகளுக்கு சென்றிருந்தனர்.
எனினும் வெள்ளம் காரணமாக வீடுகள் உட்பட சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் தற்போதுவரை பெரும் அசளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான நிவாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மக்கள், நிவாரண உதவிகளை குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.