ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.
அத்தேர்தலில், 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன, இந்நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார். பின்னர் 09 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் வைத்து, அவர் மிகவும் எளிய முறையில் ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார்.
அந்தவகையில் இன்றுடன் அவரது ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி களுகங்கை நீர்நிலை வேலைத்திட்ட நிறைவு நிகழ்வும், மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகரை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 120 ஆவது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கொழும்பு- காலி முகத்திடத்திலுள்ள பண்டாரநாயக்க சிலைக்கு முன்னால் இடம்பெறவுள்ள நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.