வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் வீடு திரும்பும்போது இழப்பீடுகளை வழங்க துரித திட்டமொன்றை முன்னெடுக்குமாறு, வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு அவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அனைத்து அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்குமாறும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
வீடுகளுக்கு சேதம் ஏற்படாதவர்கள் மீண்டும் வீடு திரும்பும்போது சமையல் உபகரணங்களும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளை திருத்தித்கொள்வதற்கு முதற்கட்டமாக 10,000 ரூபாயாகம், மதிப்பீட்டுப் பணிகளின் பின்னர் 2,50,000 வரையில் நிதியுதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வௌ்ள நிலைமை காரணமாக வட மாகாணத்தில் 8,000 ஏக்கர் வரையிலான விளை நிலம் நீரில் மூழ்கியுள்ளதால், ஏக்கருக்கு 40,000 ரூபாய் வரையில் நட்டஈடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், விற்பனை நிலையங்கள் மற்றும் மலசலகூடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை வட மாகாண அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.