யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து நாசக்கார செயலில் ஈடுபட்டுள்ளனர்.
நாசக்கார கும்பலின் செயற்பாட்டிற்கு அஞ்சி வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வராத நிலையில், சற்று நேரத்தில் வாள்வெட்டு கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.