பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மையால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள மாநகர சபையின் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வரும், வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமென எதிர்வு கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரவு செலவு திட்டத்தை ஆதரித்தது. ஐ.தே.க, சு.க, தமிழர் விடுதலை கூட்டணி என்பனவும் ஆதரவை தெரிவித்தன. ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி மாத்திரம் எதிர்த்து வாக்களித்திருந்தது.
யாழ் மாநகர சபையின் அமர்வு சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன் போது முதல்வரால் சபையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டம் கடந்த சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை எனவும், அதிகளவிலான நிதி வேறு தேவைகளுக்கு ஒதுக்கப்படுவாதாகவும் தெரிவித்து சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபியின் உறுப்பினர்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதனால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை இல்லாததால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமென்ற நிலையே காணப்பட்டதால் சபை அமர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்து. இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் இன்று நடைபெற்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களைச் செய்துள்ளதால் இதனை எதிர்க்கவில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இது மக்கள் நலன்சார்ந்த வரவு செலவுத் திட்டமல்ல எனக் கூறி இதனை ஈபிடிபியினர் இன்றையதினமும் எதிர்த்திருந்தனர். பிரதேசசபைகளின் வரவு செலவு திட்டமே 100 கோடி ரூபா அளவில் தயாரிக்கப்படும் நிலையில், யாழ் மாநகரசபை வெறும் 52 கோடியில் வரவு செலவு திட்டம் தயாரித்துள்ளது, வருமான மூலங்களை அடையாளம் கண்டு, வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படவில்லையென ஈ.பி.டி.பி எதிர்த்தது.
எனினும், மற்றைய கட்சிகள் ஆதரவளித்ததால், வாக்கெடுப்பின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஈ.பி.டி.பி தமது எதிர்ப்பை பதிவுசெய்யும்படி கோரியது.
யாழ் மாநகரசபையின் ஆட்சியை கூட்டமைப்பு அமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவு வழங்கியிருந்தது. அப்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்திருந்தது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தை ஈபிடிபி எதிர்க்க, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.