மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜன பெரமுனவினரால் அழைத்துவரப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பிரதான பேருந்து தரிப்பு நிலைத்திற்கு முன்பாக இன்று காலை மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பெரமுனவைச் சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் பங்கு கொண்டதை அடுத்து, அந்தச் சிறுவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான காரணம் என்ன என வினாவிய போது, தமக்கு எதற்காக பஸ் நிலையம் வந்தோம் என்று தெரியாது என்றும், கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டமையோடு இந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக சிவில் உடை தரித்த இராணுவம் மற்றும் பொலிஸார் இயங்கியிருந்ததுடன், இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போதும் சிவில் உடை தரித்த இராணுவம் பொலிஸார் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.