வடக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புமாறு கோரி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் போராட்டம்

வடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைத்திருப்பதாகவும் அதனை மீள கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (சனிக்கிழமை) காலை அவர் முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள மூவின மக்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால் வடக்கில் அவ்வாறான நிலைமை இன்னும் இல்லை.

ஆகவே வடக்கிலுள்ள மக்களும் தெற்கினை போன்று சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டும்.

தமிழ் மக்கள், சிங்கள மக்களை எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கும் தன்மை மாற வேண்டும். அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.

இவ்விடயத்தில் அரசாங்கம் சரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னரும் இத்தகையதொரு போராட்டத்தை கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts