நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்வைத்துள்ள இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை அழிக்கும் நிபந்தனைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவினால் ஏமாற்றப்பட்ட பின்னரும், இன்றைய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ளவர்களிடம் இருந்து கூட்டமைப்பு பெறப்போகும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது.
கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது இந்த விடயத்தில் இருவருடைய முகங்களைப் பார்த்து எடுக்கும் முடிவு அல்ல கொள்கை ரீதியிலேயே முடிவு எடுக்கப்பட வேண்டும்.
பிரதமரை தெரிவு செய்வதில் முக்கிய பாத்திரமாக விளங்கப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமது பேரம்பேசும் சக்தியை தவறான வழியில் பயன்படுத்துகின்றது.
யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான ஆதரவினை வழங்குவதற்கு கூட்டமைப்பு முன்வைத்துள்ள ஒன்றையாட்சியை ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் அமைப்பு மற்றும் உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யும் நிபந்தனையாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.