இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெரும்பான்மைக் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கு எவ்வாறான வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குவார்கள். இதில் பேரம்பேசும் நிலையை எமது தமிழ்த் தரப்பினரே தீர்மானித்து தமது முடிவுகளை முன்னிறுத்த வேண்டும்.
இன்று அரசியல் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ள இரு பிரதான கட்சிகளும் எமது இனத்திற்கு எந்தத் தீர்வினையும் பெற்றுத்தரப் போவதில்லை.
இதுவரையில் தமிழ்த்தரப்பு ஆதரவு வழங்கிய எந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகளும் தமிழர்களுக்கான தீர்வுகள் குறித்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. முன்னெடுக்கவும் மாட்டார்கள்.
எனவே இந்த தென்னிலங்கை அதிகாரப்போட்டிக்குள் தமிழ்த்தரப்பு நுழைந்து எம்மைக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. எனவே தமிழர்களுக்கான தீர்வுகளை முன்வைக்குமாறு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.