தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.

“இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பொறுப்பற்றவை. ஒரு அயல் நட்பு நாடு என்ற வகையில், இலங்கையில் மாற்றங்களை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இது ஒரு உள்நாட்டு விவகாரம், ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை சீனா தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க தேவையான திறமைகளையும் வழிகளையும் இலங்கை அரசாங்கம், கட்சிகள் மற்றும் மக்கள் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்” என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க 800 மில்லியன் ரூபா வரை கொடுக்கப்படுவதாகவும், இதற்காக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தார்.
இதனை நிராகரித்திருந்த சீன தூதரக அதிகாரிகள், ஐ.தே.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் சீனா நல்லுறவை வைத்திருப்பதாக கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.