நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் இதன்மூலம் இலங்கை மக்களால் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தம்முடைய பொறுப்புக்களை நிறைவேற்ற இடமளிக்குமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியல் நிலைமைகளை கரிசனையோடு உற்றுநோக்கிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
யார் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதிசெய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, இலங்கை மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை, அனுமதிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.