தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இருக்கும் அரசியல் யாப்பின்படி பிரதமர் பதவியில் இருக்கும் போது அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. எனவே இது ஒரு சட்டவிரோதமான செயற்பாடாகும்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முக்கியமானது.
கூட்டமைப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் என நான் நம்புகின்றேன். ஏனென்றால் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இன்னல்களை அவர்கள் மறக்கமாட்டார்கள்.
அவர்கள் எம்மிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். அதில் பலவற்றை செய்துள்ளோம். இன்னும் பல கோரிக்கைகள் இருக்கின்றது. அவர்கள் எங்களுடன் ஆதரவாகவே உள்ளார்கள்.
எனவே பெரும்பான்மை ஆதரவோடு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நடத்தும்” என்று தெரிவித்தார்.