யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு, யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் நாட்டு அரசாங்கத்தால் யாழ். பொது நூலகத்திற்கு வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் புத்தகங்களை தமிழ்நாடு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்டிடம் கையளித்தார்.
தொடர்ந்து, வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்காக கல்வியமைச்சினால் நிதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட இலங்கை மற்றும் இந்திய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.