Ad Widget

சீதனக் கொடுமையினால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் சீதன வன்கொடுமையால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் இன்னும் சில நாட்களில் திருமணத்துக்குத் தயாராக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே கேட்ட சீதனத்திற்கு மேலதிகமாகக் கேட்டமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் தந்தையை இழந்த குறித்த பெண்ணின் இந்த விபரீத முடிவினால் அப்பிரதேசம் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தாய் தந்தையை இழந்த நிலையில் குறித்த பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தென்மராட்சியில் வசிக்கும் அவரது சகோதரி ஒருவர் இந்த திருமண ஏற்பாட்டினைச் செய்துள்ளார்.

இதன்படி திருமணச் சீதனத்திற்காக 12 லட்சம் ரூபாவரை பேரம் பேசப்பட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் திடீரென்று நேற்றைய தினம் மாப்பிளை வீட்டார் குறித்த சீதனம் போதாது என்றும் மேலதிகமாக தராவிடில் திருமணத்தினை நிறுத்தவேண்டி ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பெற்றோர் இன்றிய நிலையில் தனது சகோதரியின் தயவில் வசித்துவந்த குறித்த பெண் இந்த விடயத்தைனை அறிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். இதனால் தனது சகோதரிக்கு மேலும் பணக்கஸ்டம் ஏற்படுமே என்ற விரக்தியில் இந்த முடிவை எடுத்துக்கொண்டதாக விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் குளித்துவிட்டு வருவதாக குளியலறைக்குச் சென்ற குறித்த பெண் நீண்ட நேரமாகியும் வெளியே வராத நிலையில் குளியலறையில் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக உறவினர்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts