Ad Widget

ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் : ஓ.பன்னீர்செல்வம்

நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் என்று தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அங்கு ஐந்தாவது நாளாக மாநிலத்தின் பல பகுதிகளில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை அவசர சட்டம் மூலம் விலக்க கடந்த 18 ஆம் தேதி இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோதியை சந்திக்க புதுதில்லி விரைந்தார்.

அதற்கு அடுத்தநாள் மோதியை சந்தித்த பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்சூழலில், தமிழக திரும்பாமல் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தினார்.

இன்றைய தினம் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அனைத்து துறைகளிலிருந்து ஒப்புதல் பெறப்படும் என்றும், அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு தமிழக ஆளுநர் மூலம் அவசரச்சட்டமானது அறிவிக்கப்படும் என்றார்.

உலகில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும், நாளை அல்லது நாளை மறுநாள் இந்த அவசர சட்டம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

விரைவில் வாடிவாசல் திறக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் பன்னீர்செல்வம், வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதித்து ஓடிவரும் என்று கூறினார்.

இறுதியாக, மேற்கொண்டு ஜல்லிக்கட்டிற்கு எந்தவொரு தடை வந்தாலும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.

Related Posts