இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 53 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் நூற்றிற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் முதற் தடவையாக சிறீலங்கா அரசாங்கம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் மூவரையும் உடனடியாக விடுதலைசெய்யவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய மற்றும் சிறீலங்கா உயர் மட்ட அதிகாரிகளுக்கிடையில் இருநாட்டு மீனவர் பிரச்சனை தொடர்பாக கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதிலேயே குறித்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இதனை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரப் பி.டி.ஐக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கைதுசெய்யப்படும் மீனவர்களை விடுதலை செய்ய நிலையான நடைமுறை ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் இரண்டு நாட்டு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.