வறட்சி நீங்கி மழை பொழிய பிரார்த்திக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்

சமாதானத்தைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தி அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்பார்ப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று வளமான நாட்டு மக்கள் என்ற வகையில் முன்னேறும் அபிலாஷையுடன் 2017ஆம் ஆண்டை வரவேற்க இலங்கை மக்கள் தயாராகி வருகின்றனர்.

புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பட்டாசு கொழுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த சில வருடங்களுக்குள் இலங்கை அடைந்துள்ள வெற்றிகள் தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து நிவாரணம் அளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு துறைகள் மூலமாகக் கிடைக்கும் பயன்கள் தொடர்பிலும் மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தி இளம் சந்ததியினருக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் இந்த வருடமும் முக்கியத்துவம் அளித்துள்ளது. இதற்காக நடைமுறைப்படுத்தவுள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறந்த பொருளாதாரத்தையும் சமூகத்தையும் கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த வருடம் வறுமையை ஒழிக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த வருடத்தின் எதிர்வரும் சில மாதங்களில் ஏற்படும் வறட்சி நிலையை எதிர்கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வறட்சி குறைந்து மழை கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கும் வகையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதற்காக ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Related Posts