சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்பதற்கு உதவிய யாழ்ப்பாண மக்களுக்கு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
சிங்கள மக்கள் மீது தமிழர்கள் வெறுப்பாக உள்ளார்கள் என நினைத்துகொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு எண்ணப்பாடே தென்பகுதியில் காணப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதற்கு தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கியுள்ளனர்.
எமது இறந்த உறவுகளையும் காயமடைந்தவர்களையும் உடனடியாகவே வாகனத்தில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் ஏனைய உதவிகளை செயவதற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.
அத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினரும் எமக்கு தங்குமிட உணவு ஏற்பாடுகளை வழங்கியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இவர்கள் எமக்கு வழங்கிய உதவிகளை சாகும் வரையில் தாங்கள் மறக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேனும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.