கீரிமலையில் மீள்குடியேறியவர்களுக்கு நல்லின ஆடுகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது

கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது.

கீரிமலை நகுலேஸ்வரர் வீதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஆடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (17.12.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்.

வடக்கு கால்நடை அமைச்சு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், போசணை மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடும் தகர் என்ற பெயரில் ஆடு வளர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே கீரிமலையில் அண்மையில் குடியேறிய மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன், பிரதிப் பணிப்பாளர் வக்சலா அமிர்தலிங்கம், கால்நடை வைத்திய அதிகாரி வ.மதிபா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Posts