காஸ்ட்ரோவின் மறைவுக்கு இரா. சம்பந்தன் இரங்கல்

பிடெல் காஸ்ட்ரோ அவர்களின் மறைவிற்கு இரா. சம்பந்தனால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

“எதிர்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமிடையிலான மரணம் வரையிலான போராட்டமே புரட்சியாகும்” பிடெல் காஸ்ட்ரோ

தங்களது மாபெரும் தலைவரை இழந்து நிற்கும் கியூபாவின் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தனது கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நின்ற பிடல் காஸ்ட்ரோ 50 வருடங்களுக்கும் மேலாக கியூபா மக்களுக்கு தலைமை தாங்கினது மட்டுமல்லாது கியூபாவின் புரட்சிகர இயக்கத்திற்கு 1959ல் தலைமைத்துவம் தாங்கி, கியூப மக்களின் நம்பிக்கைக்குரிய ஸ்திரமான தலைவராக விளங்கினார்.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கியூப மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்த பிடல் காஸ்ட்ரோ விசேடமாக மிக வறுமையில் வாழ்ந்த கியூப மக்களின் நலம் குறித்து அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்திய அதேவேளை காஸ்ட்ரோ மிக வறுமையில் இருந்த சில ஆபிரிக்க நாடுகளிற்கு காட்டிய அக்கறைக்காக அவர்களால் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்.

உலகம் முழுவதிலும் பல்வேறு இயக்கங்கள் தனிநபர்கள் மற்றும் பிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகளை ஏற்காதவர்கள் உட்பட என அவரது தலைமைத்துவத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் அநேகர்.

அநேகமான கியூப மக்களின் வாழ்க்கையில் பிடல் காஸ்ட்ரோ ஒரு மிகச்சிறந்த தலைவராக தனி இடத்தை பிடித்துக் கொண்டுள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் கியூபாவிற்கும் அதன் மக்களிற்குமான பிடல் காஸ்ட்ரோவின் கனவானது நனவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

இரா. சம்பந்தன்
எதிர்க்கட்சி தலைவர் இலங்கை பாராளுமன்றம்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Related Posts