தீவகக் கர்ப்பிணிகளுக்கு அவசர அறிவுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 331 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவக பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் , யாழ். நகர் பகுதிகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், அனர்த்த அபாயங்களைக் குறைத்தல் மற்றும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

அதன் போது, யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 331 மில்லி மீற்றர் மழை எதிர்பார்க்கப்படும் நிலையில், நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட கடல் கடந்த தீவுப் பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களைக் கடந்த கர்ப்பிணித் தாய்மார்கள், அனர்த்த காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் போக்குவரத்தைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலோ தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் பிரசவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், கடந்த வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு, இந்நோயைத் தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, வயல் நிலங்களில் பணியாற்றுவோர் தத்தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அணுகி, எலிக்காய்ச்சல் தடுப்புக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டது.

Related Posts