பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் பொதுச் சேவைகளை மேலும் செயல்திறன்மிக்கதாகவும் மேம்பட்டதாகவும் மாற்றுவதற்காக “ஜனரிதம்” (SL-PULSE) என்ற இலங்கையின் முதலாவது தேசிய அளவிலான குடிமக்கள் கருத்தறியும் கணக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

அமைச்சரவையின் பூரண அங்கீகாரத்துடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுடன் இக்கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுகின்றது. பிரதேச செயலகங்கள் ஊடாகப் பிரஜைகள் பெற்றுக்கொள்ளும் சேவைகள் குறித்த அனுபவங்களையும் கருத்துகளையும் நேரடியாகப் பெற்றுக்கொண்டு, அரச சேவைகளை அனைத்துப் பிரஜைகளுக்கும் பயனுள்ள வகையில் மறுசீரமைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இக்கணக்கெடுப்பானது முற்றிலும் சுயாதீனமானதுடன், எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடனோ தொடர்பற்ற முறையில் நடத்தப்படுகின்றது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக மட்டுமே பிரஜைகளின் அடையாளத் தகவல்கள் பயன்படுத்தப்படும். பெறப்படும் அனைத்து பதில்களும் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு, பொதுவான தரவுகளாக மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்.
மேலும், இக்கணக்கெடுப்பில் பங்கேற்றுப் பதிலளிப்பதனால் பிரஜைகள் தற்போது தங்கள் பிரதேச செயலகங்களில் இருந்து பெற்றுவரும் அல்லது எதிர்காலத்தில் பெறவுள்ள எந்தவொரு சேவையிலும் எவ்வித எதிர்மறைப் பாதிப்புகளும் ஏற்படாது என அமைச்சினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பை முழுமையாக நிறைவு செய்வதற்குச் சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும் என்பதுடன், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜைகளும் இதில் பங்கேற்கத் தகுதி உடையவர்களாவர்.
இக்கணக்கெடுப்பானது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை பொதுமக்கள் பங்கேற்பதற்காகத் திறக்கப்பட்டிருக்கும். இக்கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் https://ee-kobo.undp.org என்ற இணையதள இணைப்பின் ஊடாக நேரடியாகப் பங்கெடுக்க முடியும்.
பொறுப்புணர்வுள்ள ஒரு பிரஜையாக மக்கள் வழங்கும் உண்மையான பங்களிப்பானது, இலங்கை மக்களுக்கு மேலும் வெளிப்படையான, செயல்திறன்மிக்க மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அரச சேவையை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார தெரிவித்துள்ளார்.