ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சிவகரன் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் இவர் நேற்று வியாழக்கிழமை பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதற்கமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு இதன்போது நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்லத்தடை விதிக்கப்படுவதாக நீதிவான் உத்தரவிட்டார். அவசர தேவைகளுக்காக வெளிநாடு செல்வதாயின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் நீதவான் விதித்துள்ளார்.
அதேபோன்று, ஒவ்வொரு மாதத்திலும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்துக்கு வந்து கையெழுத்து இடுமாறும் சிவகரனுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தென்மராட்சிப் பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருடன் தொடர்புகளைப் பேணினார் என்ற குற்றச்சாட்டில் சிவகரன் நேற்று முன்தினம் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.