கிளிநொச்சியில் உள்ள பரவிபாஞ்சான் கஜபா படைப்பிரிவின் இராணுவத் தலைமையகத்துக்குள் நுழைவதற்கு முழுமையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தான் படை முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை என்றும் பொதுமக்களின் காணிகளைப் பார்ப்பதற்கே அங்கு சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிகமாக கதைப்பதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளில், அந்தப் படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளதாகவும் அதனைக் கண்காணிப்பதற்கே தான் அங்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், ‘எவ்விதமான முன் அனுமதியும் இன்றி, இராணுவ முகாமுக்குள் பலவந்தமான முறையில் நுழைய வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இதற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். அத்துடன், ‘யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான முன் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சம்பவத்தையடுத்து இராணுவத் தளபதியும் தனிப்பட்ட ரீதியில் சம்பந்தனுக்கு அறிவுறுத்தியுள்ளார்’ என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.