தனியார் வைத்தியசாலை செயற்பாடுகளில் கட்டுப்பாடு

தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களை பார்வையிடுவதற்கான கட்டணம் மற்றும் வைத்தியர்கள் நோயாளிகளுடன் செலவிட வேண்டிய நேரம் போன்றவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரைவில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

வற் வரி மறுசீரமைப்பில் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. எனினும், மருந்துகளுக்கான விலை அதிகரிக்கப்படாது. வற் வரி அதிகரிப்பால் தனியார் வைத்தியசாலைகளிலிருந்து பெறப்படும் பணம் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காகவும், சர்வதேச பாடசாலைகளின் வற் வரி அதிகரிப்பால் பெறப்படும் பணம் கல்வித்துறைக்கும் பயன்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தனியார் வைத்தியசாலைகளில் விசேட மருத்துவர்களைப் பார்வையிடுவதற்காக ஆகக் கூடிய கட்டணமாக 2000 ரூபா தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மருத்துவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நோயாளர் ஒருவருடன் வைத்தியர்கள் 10 நிமிடங்கள் செலவழிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்தியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. பிரித்தானிய மருத்துவ முறையின் கீழ் ஒரு நோயாளிக்கு 7 நிமிடங்களே விசேட மருத்துவ நிபுணர்கள் செலவளிக்கின்றனர். எனவே இலங்கையிலும் 10 நிமிடம் என்பது குறைக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக அமைச்சர் கூறினார். எனினும், பிரித்தானியாவிலும், இலங்கையிலும் வைத்தியர்களை பார்வையிடுவதற்காக பின்பற்றப்படும் முறை வித்தியாசமானது. இலங்கையில் ஒரு நோயாளி நேரடியாக விசேட மருத்துவ நிபுணரிடம் செல்கிறார். ஆனால் பிரித்தானியாவில் அவ்வாறில்லை. குடும்ப மருத்துவரிடம் காண்பித்து பின்னர், பொது வைத்திய நிபுணரிடம் காண்பித்து அதன் பின்னரே விசேட மருத்துவ நிபுணரிடம் செல்கின்றனர்.

எனவே இலங்கையில் ஒரு நோயாளிக்கு வைத்தியர் ஒருவர் 10 நிமிடங்களை ஒதுக்க வேண்டும். இது விடயங்கள் தொடர்பில் விரைவில் சுற்றுநிருபம் வெளியிடப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். அதேநேரம், தனியார் மருத்துவசாலைகளில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் வைத்திய நிபுணர்கள் சத்திரசிகிச்சை முடிவடைந்த பின்னர் ஒரு மணித்தியாலங்கள் நோயாளிக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவரவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சத்திரசிகிச்சை முடிவடைந்து தையல் இடப்படுவதற்கு முன்னரே வைத்திய நிபுணர்கள் வீட்டுக்குச் சென்றுவிடுகின்ற நிலைமையே காணப்படுகிறது. வெளிநாடுகளில் அவ்வாறு இல்லை. இவ்வாறான நிலையை இங்கும் கொண்டுவரும் நோக்கில் சத்திரசிகிச்சை முடிவடைந்து ஒரு மணித்தியாலங்கள் நோயாளிக்கு அருகில் வைத்தியர் இருக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது என்றார்.

வற் வரி மறுசீரமைப்புத் தொடர்பாக மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இது தொடர்பிலேயே அண்மையில் ஜனாதிபதி பொலனறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார். வற் வரி மறுசீரமைப்புத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு சிறந்த விளக்கமொன்றை அளித்திருந்தார். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வற் வரி மறுசீரமைப்பு இருக்கும் என்ற விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts