தற்கொலை அங்கி தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்னும் சிலர் கைதாகலாம்!

யாழில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டாலும், தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல இடங்களில் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டுவருவதாகவும், இன்னும் சில நாட்களில் பலர் கைது செய்யப்படக் கூடும் எனவும் சாவகச்சேரி காவல்துறையினர் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் மீட்கப்பட்ட அங்கி தொடர்பில் இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பின்னர் கொழும்பு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட சாவகச்சேரி காவல்துறையினர்,

வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதெனவும், சிலவேளைகளில் கடத்தப்பட்டு பூசாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெள்ளை வானில் கடத்தப்பட்டவரை பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசென்று பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடாத்தப்படலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து மேலதிக தகவல்களை அவர்கள் வழங்க மறுத்துள்ளதுடன், இதனால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி சாவகச்சேரி காவல்துறையில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

Related Posts