65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இரண்டு மாதங்களில் ஆரம்பம்!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65000 விடுகளை நிர்மானிக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களினதும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக யாருக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை, வீட்டு நிர்மானப் பணிக்கான மீளவும் விலை மனு கோரப்படாது எனவும், மிட்டால் நிறுவனத்திற்கு ஏற்கனவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாரியளவிலான நிர்மானப் பணிகளை உள்நாட்டு கட்டிட நிர்மானிப்பாளர்களினால் மேற்கொள்ள முடியாது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டமானது இரண்டு ஆண்டுகளில் முழுமையாக நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டமானது, 21 லட்சம் செலவில் பொருத்து வீடுகளாக அமைக்கப்படவுள்ளதுடன், மாதிரி வீடுகள் அமைக்கப்பட்டு அதுகுறித்து சகலருக்கும் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது, இந்த வீட்டுத்திட்டத்தில் பல எதிர்ப்புக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், குறித்த வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிக்கும் செயற்பாட்டினை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி, பொதுமக்களின் விருப்பத்தினை அறிந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ற வீட்டினை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Posts