99 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை முடிவு

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 99 பேரை விடுதலை செய்ய அரசு நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இராமநாதபுரத்தைச் சேர்ந்த 49 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த 3 மீனவர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த 20 மீனவர்கள் என மொத்தம் 99 மீனவர்களை கைது செய்து வவுனியா, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய சிறைகளில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 300 மீனவர்களுக்கு ரூ.4.5 கோடி மதிப்பிலான 150 படகுகள், மீன்பிடி உபகரணங்களை வழங்கு வதற்கான ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இடையே கொழும்பில் கடந்த வாரம் கையெழுத்தானது.

அப்போது இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்திய தூதர் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யு மாறு நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு அரசு நேற்று பரிந்துரை செய்துள்ளது என இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

ஆனால், கைப்பற்றப்பட்ட 10 விசைப் படகுகள், 6 நாட்டுப் படகுகள், 2 பைபர் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.

இந்த மீனவர்கள் மன்னார், மல்லாகம், ஊர்காவல்துறை, புத்தளம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தனர். இவர்கள் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு ஏப்.19 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts