Ad Widget

அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை, சமூக விரோதச் சம்பவங்கள் தொடர்பில் முறையிட புதிய தொலைபேசி எண்

யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் சமூக விரோதச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கான தொடர்பிலக்கத்தினை யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகன் நேற்று அறிவித்துள்ளார்.

0212225000 என்ற எண்ணிற்கு அழைத்து அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்ட சகலவிதமான முறைப்பாடுகளையும் அறிவிக்கலாம் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்படும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பாக முழுமையான இரகசியம் பேணப்படும் என்று தெரிவித்துள்ள அரச அதிபர் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள், சமூகவிரோதச் செயல்கள், போதைப் பொருள் பாவனை, போதைப் பொருள் விற்பனை போன்றன அதிகரித்துக் காணப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக உரிய இடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் எந்த விதமான பயனும் நிகழவில்லை என்றும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது குறித்த தொலைபேசி இலக்கம் அரச அலுவலக நேரங்களில் மட்டும் தொழிற்படும். ஏதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த தொலைபேசி 24 மணித்தியாலங்களும் தொழிற்படும். இதன் பின்னர் எந்த வேளையிலும் பொது மக்கள் முறைப்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் என்றார்.

மேலும் வடமாகாண மக்கள் தங்கள் தங்கள் பிரதேச செயலகங்களிலேயே பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மற்றும் திருமணப்பதிவு நகல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதற்காக யாழ் செயலகத்திற்கு வருகை தரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்

அத்துடன் யாழ் செயலகத்திற்கு முன்பாக பணம் கொடுத்து விண்ணப்பங்கள் நிரப்ப தேவையில்லை உள்ளே ஒரு அலுவலர் இலவசமாகவே விண்ணப்பங்களை நிரப்புவதற்கு உதவி வழங்க நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருட நடுப்பகுதியில் உலகவங்கியின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் யாழ் நகரம் அபிவிருத்தி செய்வதற்கான் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts