கூட்டரசுக்கு விழுந்தது முதல் அடி

தேசிய அரசு உதயமாகிய பின்னர், நாடாளுமன்றில் நேற்று முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியலூடாக அரசு பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் தொகையை 400 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்த இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இவ்வாறு பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டியும், கூச்சலிட்டும் சபையில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரேரணையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் ரவிகருணா நாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா , எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் செனவிரட்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருக்கவில்லை.

பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பியும் வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்ககெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அதேவேளை, அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் விஜித் விஜிதமுனி சொய்ஸா ஆகிய இருவர் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஏனைய எவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாயக்கிழமை உள்நாட்டு திறைசேரி உண்டியல் சட்டத்தின் தீர்மானம் மீதான பிரேரணையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார்.

அதற்கு முன்னரான தீர்மானத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட தொகைக்கு (850 பில்லியன் ரூபா) மேலதிகமாக 400 பில்லியன் ரூபாவைத் தாண்டாத தொகையயான்றை இலங்கையில் இலங்கை அரசின் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் கடனைப் பெறும் நோக்கில் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக ஆளுந்தரப்பினர் கருத்து வெளியிட்டபோது, பிரேரணையை கடுமையாக எதிர்த்து எதிர்த்தரப்பினர் கருத்துக்களை முன்வைத்தனர்.

ஆட்சி அமைத்து குறுகிய காலத்துக்குள்ளேயே அதைக் கொண்டு நடத்த முடியாமல் பொருளாதார ரீதியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி நாட்டை ஆபத்தான நிலைக்கு அரசு கொண்டு செல்கின்றது என விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு தாம் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டார்கள் என உறுதிபடத் தெரிவித்தனர்.

விவாதத்தின் இறுதியில் வரிசைக்கிரமமாக வாக்கெடுப்பு நடத்துமாறு விமல் வீரவன்ஸ, சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திம வீரக் கொடியிடம் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, இடம்பெற்ற வாக்கெடுப்பில் 21 மேலதிக வாக்குகளால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

அதேவேளை, மேற்படி பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, 19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அரச தரப்புக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.

Related Posts