நாட்டில் ஜனநாயக சூழலை ஏற்படுத்த மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்குமாறு அடக்குமுறைகளுக்கெதிரான அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா, திங்கட்கிழமை (05) தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தாம் விரும்பி அக்கறையோடு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும். அத்தோடு இந்த தேர்தலை குழப்ப பல சக்திகள் செயற்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகாலையில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்த முடிவு அரசியல் சாணக்கியம் மிக்கது. இது சரியான முடிவாகும். அவர் ஞானம்மிகுந்த, மக்களின் மனங்களை குறிப்பறிந்து செயற்படுபவரும் ஆகும். எனவே அவரது முடிவு சரியான முடிவாகவே அமையும்.
வடமாகாண சபை தேர்தலில் மக்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கினார்களோ அதுபோல இந்த தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறும் வேட்பாளருக்கு மக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
சிங்கள தேசத்து ஐனாதிபதியாக யார் வந்தாலும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்யமாட்டார்கள். ஆனால் எமது மக்களை மரணத்தின் எல்லைக்கு கொண்டு சென்று விட்டு, நிம்மதியற்ற வாழ்க்கையை கொடுத்ததுடன், உயிரிழப்புக்களை ஏற்படுத்திய மஹிந்த அரசை நீக்க வேண்டும். அத்தோடு மைத்திரி மனச்சாட்சிக்கு ஏற்ப எமக்கு ஏதாவது செய்வார் என நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவை வழங்குவோம் என தம்பிராசா கூறினார்.