பார்வையிழந்தவர் நகைகளை அடைவு வைக்க முடியாதென்கிறது யாழ்.வங்கி

வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அடைவுக்காக நகைகளைப் பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் நகைகள் மீளவும் கையளிக்கப்பட்ட சம்பவம், யாழ். வங்கியொன்றில் நடைபெற்றுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வங்கியில் பார்வையிழந்த பெண் ஒருவர் தன் வசமிருந்த நகைகளை நேற்று முன்தினம் காலை அடைவு வைத்துள்ளார்.

அங்கிருந்த அலுவலரால் நகைகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு நகைக்குரிய பணமும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் வங்கி அதிகாரிகளால் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

உடனடியாக வங்கிக்கு வந்த பார்வையிழந்த வாடிக்கையாளரிடம், உங்களுக்குக் கண் பார்வைக்குறைபாடு இருப்பதன் காரணமாக நீங்கள் நகைகளை இங்கு அடைவு வைக்கப்பட முடியாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் நகைகள் மீள வழங்கப்பட்டு, அதற்காக வாடிக்கையாளர் பெற்றுக்கொண்ட பணமும் வங்கியினால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பார்வையிழந்த பெண் இது தொடர்பாக யாழ்.விழிப்புலனற்றோர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts