பொலிஸாரின் உதவியுடன் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் – அனந்தி

பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டுவதன் மூலம் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இன்று (25) தெரிவித்தார்.

ananthi_sashitharan

யாழ். சமூக மேம்பாட்டு மையத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் செவ்வாய்க்கிழமை தொடக்கம் டிசெம்பர் 10ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனந்தி சசிதரனை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போருக்கு பின்னரான காலத்தில் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து கொண்டு வருகின்றன. அதை தடுத்து நிறுத்துவதற்குரிய வழி இல்லாமல் இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து, ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாது.

தொடர்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கிராம மட்டத்தில் இது தொடர்பான கருத்தமர்வுகளும் மேற்கொள்ள வேண்டும்.

இதை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த மகளிர் அமைப்புக்கள், பொலிஸார், சட்டவல்லுநர்கள் போன்ற பலதரப்பட்ட சமூக நலன் சார்ந்த அமைப்புக்களின் உதவிகள் எமக்கு தேவையாகவுள்ளது.

மாகாணசபையில் இது தொடர்பாக நான் கதைத்தும், உரியவர்கள் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றால் குறித்த பெண்ணை கீழ்தரமாக பார்ப்பதும் பகிரங்கமாக கேள்வி கேப்பதும் தான் தற்போது உள்ள பொலிஸ் நிலையங்களில் கூடுதலாக நடைபெறுகின்றது.

இதனால் துணிந்து சென்று பெண்கள் தமது பிரச்னைகளை முறையிட முடியாத நிலையில் உள்ளார்கள். இதன் காரணமாக மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் அளவிற்கு பெண்கள் செல்கின்றனர்.

பெண்கள் மட்டுமல்லாமல் வயோதிப பெண்களும் வீட்டிலும் வீதியிலும் சுதந்திரமாக இருப்பதற்கும் நடமாடி திரிவதற்கும் முடியாத கொடூரமான சூழல் தற்போது காணப்படுகின்றது.

வன்முறைக்கு முக்கிய காரணமாக மதுபாவனை போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

வடமாகாண சபையில் பொலிஸ் அதிகாரத்தை கேட்பதற்கு முன்னர் பொலிஸாருடன் இணைந்து இணக்கப்பாட்டுடன் சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக நலனை பாதுகாக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts