நாவாந்துறையில் பொலிஸ், இராணுவம் குவிப்பு

மைலோ கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியின் போது, இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியின் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்று நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம்பெற்ற மைலோ கிண்ண இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி, நவிண்டில் கலைமதி அணியை வென்று சம்பியனாகியது.

வெற்றிக்கிண்ணத்துடன் நாவாந்துறைக்கு வீதி ஊர்வலமாகச் சென்ற சென்.மேரிஷ் அணியினர், சென்.நீக்கிலஸ் மைதான வழியாக செல்லும்போது, இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியதில் நாவாந்துறையில் பதற்றம் நிலவியது.

தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (24) காலை கடற்றொழிலுக்கு சென்ற சென்.நீக்கிலஸ் ஆதரவு தொழிலாளிகள் மீது, கேரதீவு சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் வைத்து 20பேர் கொண்ட குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சென்.நீக்கிலஸ் ஆதரவாளர்கள் அறுவர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, மீண்டும் கைகலப்பு வலுப்பெற்ற நிலையில், நாவாந்துறை சந்தைப்பகுதியில் இரு தரப்பினரும் பரஸ்பரம் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, அங்கு மேலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நாவாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts