Ad Widget

ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மீதான நடவடிக்கையில் சந்தேகம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் மீது எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது என ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

hall2

இது தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர், ‘இந்த கோரிக்கையில் நியாயமும், உற்பத்தி நிலையங்களின் சுகாதார நடைமுறைகளில் முறையான நேர்த்தியும் இருக்குமாக இருந்தால் இது தொடர்பில் நிச்சயம் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களை நடத்திவரும் சுமார் 35 உரிமையாளர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து அமைச்சருடன் கலந்துரையாடினர்.

கடந்த ஒருமாத காலத்துக்கும் மேலாக பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினரின் செயற்பாடுகள் காரணமாக தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் உரிமையாளர்கள், ஊழியர்கள் என சுமார் 2500பேர் நேரடியாகவும் கொள்வனவு செய்து விநியோகம் செய்யும் சுமார் பதினையாயிரத்துக்கு மேற்பட்டவர்களும் தொழிலற்றுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

சிறிய அளவிலான கைத்தொழில் போல் பல வருடங்களாக ஐஸ்கிறீம் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் முறையான பிரதேச சபை, மாநகர சபை மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் அனுமதியையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டே தொழில் செய்து வந்துள்ளதாகவும் இதுவரை யாழ்.போதனா வைத்தியசாலையிலோ, பிரதேச வைத்தியசாலைகளிலோ ஐஸ்கிறீம் உண்டதால் நோயாளியாகி எவரும் மருத்துவம் பெற்றதாக நாம் அறிந்ததில்லை. எங்களது பிள்ளைகளும் இதையே சாப்பிடுகின்றார்கள். நாம் சுகாதாரத்துக்கு கேடாகவோ, முறையற்ற விதத்திலோ தொழில் செய்வதில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால், தற்போது எமது தொழில் நிறுவனங்களை பரிசோதிப்பவர்களாக வருகின்றவர்கள், யாழ்ப்பாண குடி தண்ணீரில் மலத்தொற்று உள்ளதாகவும் அதனால் வாந்திபேதி, வயிற்றோட்டம் ஆகிய நோய்களை உண்டு பண்ணக்கூடிய கிருமி உள்ளதாகவும் கூறுகின்றனர். அதனால் அந்த நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐஸ்கிறீமில் சுகாதாரக்கேடு இருப்பதாக கூறுகின்றனர்.

நாங்கள் தண்ணீரை சுட வைத்து உரியவாறு வடிகட்டிப் பாவிப்பதாக கூறினால், தயாரிக்கும் இடம் சரியில்லை, சுகாதாரமான முறைமை இல்லை, குளிர்சாதனப் பெட்டி சரியில்லை, களஞ்சியப்படுத்தும் விதம் சரியில்லை, பாவிக்கும் மூலப்பொருட்களின் கரைசல்கள் சரியில்லை, ஊழியர்களுக்கு தங்குமிட வசதியில்லை, ஊழியர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வேண்டும் என்று எம்மை தொழிலைத் தொடரவிடாமலிருக்க காரணங்களைத் தேடித்தேடி முன்வைக்கின்றார்கள்.

இவற்றைப் பார்க்கும் போது தென் இலங்கையிலிருந்து ஐஸ் கிறீம் விநியோக உரிமத்தை பெற்றுக்கொண்டிருப்போருக்காக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது.

நாம் சிறிய அளவிலேயே தொழில் செய்கின்றோம். அதற்குத் தேவையான நடைமுறைகளையே நடைமுறைப்படுத்துகின்றோம். அவற்றிலும்கூட நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், ஆலோசனைகளையும் எமது சூழலுக்கு ஏற்றவாறான வழிகாட்டலை விடுத்தால் அதைப் பின்பற்றவும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் வருகின்ற அதிகாரிகளோ, எமது தொழிலை எவ்வாறெனினும் தடைசெய்ய வேண்டுமென்ற முடிவோடு செயற்படுகின்றனர். இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம்.

இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் குடும்பங்களோடு சாக வேண்டியதுதான் என்றும் கூறிய ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களாகிய தமது நிலைமையை புரிந்து பாரம்பரிய கைத்தொழில் முயற்சிகள் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் என்றவகையில் எங்களது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எம்மையும் தமது அமைச்சுக்குள் உள்வாங்கி, நெருக்கடிகளை அகற்றி தொழிலைத் தொடர உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

Related Posts