ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசு தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் உள்ளது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்தியா சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் இந்தியப் பிரதமர் உட்பட பா.ஜ.க. முக்கிஸ்தர்களை புதுடில்லியில் சந்தித்து பேச்சுக்களை நடத்தினர் இந்தச் சந்திப்பின் பின் தமிழகம் சென்ற கூட்டமைப்புக் குழுவினர் சென்னையில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களையும் சந்தித்தனர்.
கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் சிலதினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய போதிலும் கூட்டமைப்பினர் தலைவர் சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகலே கொழும்பு திரும்பினார்.
இந்தியப் பயணம் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தியப் பயணம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் மோடி தலைமையிலான இந்திய அரச உறுதியாக உள்ளது. புதுடில்லியிலும், தமிழகத்திலும் நாம் நடத்திய சந்திப்புக்களின்போது ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க. அரசிடம் விரிவாக விளக்கிக் கூறினோம்.
இந்தியப் பிரதமர் மோடி ஈழத்தமிழர்களைக் கைவிடமாட்டோம் என எம்மிடம் உறுதியளித்துள்ளார். எனவே இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டமைப்பும் ஈழுத்தமிழர்களும் உள்ளனர். – என்றார் அவர்.