Ad Widget

கமலேந்திரனுக்கும் றெக்ஷிசன் மனைவிக்கும் பிணை

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை 2 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வெள்ளிக்கிழமை (29) அனுமதியளித்தார்.

Kamal

வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வாரத்தில் ஒரு தினம் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடவேண்டும் என்றும், நீதிமன்ற அனுமதியில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளிநாடு செல்ல முடியாது எனவும் நீதிபதி கூறினார்.

அத்துடன், இரண்டாவது சந்தேகநபரான நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் மனைவி அனிற்றாவை, 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா 1 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.

இந்தக் கொலை வழக்குத் தொடர்பான சாட்சியங்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என நீதிபதி, இருவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், மேற்படி நிபந்தனைகள் மீறப்பட்டால் உடனடியாக பிணை ரத்துச் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதிபதி மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

அத்துடன், றெக்ஷப்சனின் மனைவி அனித்தா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறையில் கடந்த 9 மாதங்களாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கமலேந்திரன் மற்றும் அனித்தா ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி, பிணை மனு இன்று வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இருவரும் பிணை வழங்கினார்.

கமலேந்திரன் சார்பில் சட்டத்தரணி றெமிடியஸும் அனித்தா சார்பில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் வாதாடினார்கள்.

எனினும், மூன்றாவது சந்தேகநபரான இளைஞனுக்கு பிணை மனுக்கோரி விண்ணப்பிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts