ஐநா விசாரணை குழு முன் மக்கள் சாட்சி சொல்ல வேண்டும்! – அப்பாத்துரை விநாயகமூர்த்தி

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு முன்பாக மக்கள் சாட்சியங்கள் சொல்ல தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

appaththurai-vinayakamoorththy

யாழ். ஊடக அமையத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

அதற்கான விசாரணை குழு மிக விரைவில் இலங்கை வரவுள்ளது. அந்த குழுவிடம் சாட்சியங்கள் சொல்ல மக்கள் தயாராக இருக்க வேண்டும். அந்த குழுவின் முன்னாள் நானும் சாட்சியங்கள் கூறுவேன்.

ஐக்கிய நாடுகள் சபையே எமக்கான தீர்வினை பெற்று தரவல்லது. இலங்கை அரசாங்கமோ இந்திய அரசாங்கமோ எமக்கான தீர்வினை பெற்று தரப்போவதில்லை என மேலும் தெரிவித்தார்.

இதன்போது இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைக்கு ஒப்பானது என்ற சொல்லே பாவிக்கபப்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்த சிலர் கூறுவது தொடர்பாக கேட்ட போது,

இங்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் 40 ஆயிரம் மக்கள் கொல்லபப்ட்டது இனப்படுகொலை இல்லையா? புலிகள் சண்டை பிடிக்க போனார்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கொல்லாப்பட்டதற்கு விசாரணை தேவை.

இங்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என தற்போது வெளிநாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. பிறகேன் இனப்படுகொலைக்கு ஒப்பான என்ற சொல் பாவிக்க வேண்டும் என அவர் அதற்கு பதில் அளித்தார்.

Related Posts