அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையில் நேற்றய தினம் (30) இடம்பெற்ற நூலக உதவியாளர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ம் ஆண்டு யாழ்.மாநகர சபையை பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இச்சபையின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறான முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் முக்கியமானவை. அதனால் தான் பல்வேறு மாற்றங்களுடன் உத்வேகத்துடனும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்துள்ளது என்றும், இதுவரையில் 800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக யாழ்.மாநகர சபையூடாக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் தமது சுகபோகத்திற்காக வாகனங்களை கொள்வனவு செய்து வரும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் எமது பகுதிகளின் அபிவிருத்திக்காகவும் தனது சுகபோகங்களையே தூக்கி எறிந்தவர் என்றும் சுட்டிக்காட்டினார்.
முன்பதாக நல்லூர் கந்தசாமி கோவில் முன்றலிலிருந்து மங்கள வாத்தியம் சகிதம் யாழ்.மாநகர சபையின் பிரதான மண்டபத்திற்கு அமைச்சர் அவர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மாநகர முதல்வரின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் தொழிற்சங்க தலைவர் ஜோன்சன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் றீகன், மங்களநேசன், ஆணையாளர் பிரணவநாதன், அமைச்சர் டக்ளஸின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன் ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன் அமைச்சர் அவர்கள் பிரதம விருந்தினர் உரையாற்றும் போது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தி உங்களது வாழ்வாதாரத்தையும் மாநகர சபையின் மேம்பாட்டுக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஆணையாளர் பிரணவநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.