Ad Widget

இ.போ.ச. பேரூந்து ஊழியர்களை தாக்கிய இருவர் கைது

arrest_1இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 02 பேரூந்துகளின் சாரதி ஒருவரையும் நடத்துநர் ஒருவரையும் தாக்கியதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகரிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்து ஒன்று பயணித்த அதே வழித்தடத்தில், யாழ். நகரிலிருந்து தனியார் மினி பஸ் ஒன்றும் நேற்று வியாழக்கிழமை பகல் பயணித்தது.

இந்த நிலையில், புளியங்கூடல் பகுதியில் இ.போ.ச. பேரூந்தை முந்திய மினி பஸ் சாரதி, பஸ்ஸிலிருந்து இறங்கிவந்து இ.போ.ச. பேரூந்துச் சாரதியை தாக்கினார்.

இது தொடர்பில் பேரூந்து நடத்துநர் யாழ். பேரூந்து நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து மற்றுமொரு பேரூந்து நடுவழியில் நிற்கும் பயணிகளை ஏற்றுவதற்காகச் சென்றது.

இதன்போது மற்றைய பேரூந்தின் நடத்துநரையும் தனியார் மினி பஸ் சாரதி தாக்கினார்.

இதில் காயமடைந்த சாரதி எம்.சுரேந்திரன் (வயது 27), நடத்துநர் எஸ்.பரமநாதன் (வயது 41) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், இந்தத் தாக்குதலைக் கண்டித்தும் மினி பஸ்களினால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண முகாமையாளர் எஸ்.அஸ்கர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன், 03 நாட்களில் இ.போ.ச. ஊழியர்களின் கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Posts